உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹைடெக் கல்லூரி அருகே கடந்த மே 15 ஆம் தேதி மாலை, பிபிஏ இறுதிவருட மாணவர் திருவ் தியாகி என்பவரை  நால்வருக்கும் மேற்பட்ட நபர்கள் பேஸ்பால் பேட்கள், ராடுகள், மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றால் நடுரோட்டில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முகமூடி அணிந்த அந்த குற்றவாளிகள் அவரை பட்டப்பகலில் கொடூரமாக  தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. படுகாயங்களுடன் மாணவர் சாலையில் விழுந்து தவித்ததை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தாக்குதலில் சிக்கிய திருவ் தியாகி ஹாபூரைச் சேர்ந்தவர்.  மாணவர் உயிருக்கு போராடிய நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பிரதம் வத்ஸ், அலோக், சுமித் மற்றும் நக்குல் சங்க்வான் ஆகிய நால்வருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

https://x.com/lokeshRlive/status/1924442873266659822?t=_GUY4onSZ46pxGZo5KCePQ&s=19

பாதிக்கப்பட்ட மாணவர் கடந்த ஆண்டு ஒரு விளையாட்டு நிகழ்வில் சில மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னர் வகுப்புகளில் கலந்து கொள்ளாமல் தேர்வுகளுக்கு மட்டும் வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் தொடர்ந்து மயங்கி விழுவதுடன், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.