
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர் மாட்டுத்தாவணியில் உள்ள பழ மார்க்கெட் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல தங்கப்பாண்டி மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அப்போது 5 பேர் கொண்ட மர்மகும்பல் மார்க்கெட்டிற்கு சென்று நீண்ட நேரமாக தங்கபாண்டியை தேடி உள்ளனர்.
அப்போது மார்க்கெட் அருகே உள்ள ஒரு கடையில் தங்கபாண்டி சாப்பிட்டு கொண்டிருந்தார். அதனை பார்த்த அந்த கும்பல் தங்கபாண்டியிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு தங்கப்பாண்டிக்கும் அந்த மர்ம கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் அவர்கள் தங்கப்பாண்டியை கத்தியால் குத்தி அவரது கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதனால் தங்கபாண்டி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த மர்ம கும்பலை பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தங்கபாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தங்கப்பாண்டிக்கும் அந்த கும்பலுக்கும் இடையே ஏதாவது முன் விரோதம் இருந்ததா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொது மக்களிடையை பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.