
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நடந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மண்டலவடி கூட்டுரோடு பகுதியில் விவசாய நிலத்தில் தனியே வீடு கட்டி வசிப்பவர் கிருஷ்ணன் (70). அவரது மனைவி கனகா (60).
சம்பவத்தன்று கிருஷ்ணன் வெளியே சென்றிருந்த நிலையில், கனகா கழிவறைக்கு சென்றபோது, மர்ம நபர் ஒருவர் அவர் மீது மிளகாய் பொடி தூவி தெரியாமல் தாக்கினார்.
மேலும் அந்த நபர் கட்டையால் கனகாவை மோசமாக தாக்கி, கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கத்தினர் கனகாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூதாட்டி மீது பட்டப்பகலில் இவ்வாறு மோசமான முறையில் தாக்குதல் நடக்க, அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். நகை பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு, கண்காணிப்பு காமிரா காட்சிகள் ஆய்வு செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.