உத்தரப் பிரதேச மாநிலம் மோர்னா கிராமத்தில், பெற்ற தந்தை என்றும் பாராமல் இரண்டு மகள்கள் சேர்ந்து தங்கள் தந்தையின் கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது 58 வயதான ராம்பிரசாத், விவசாயம் செய்து வந்தார். திங்கட்கிழமை அதிகாலை இவர் தனது அறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மர்ம நபர்கள் யாரோ உள்ளே புகுந்து இவரைக் கொன்றதாக இவரது மனைவி சந்திரகலி முதலில் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதுபற்றி போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்டனர். விசாரணையின் போது ராம்பிரசாத்தின் 30 வயது மகள் கோமல் மற்றும் அவரது இள வயது சகோதரி ஆகியோரின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், இருவரும் சேர்ந்து தந்தையைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
விசாரணையில் மகள்கள் கூறிய காரணங்கள் போலீசாரையே அதிரவைத்துள்ளன. அதாவது தந்தை ராம்பிரசாத் எதற்கெடுத்தாலும் மகள்களைக் கண்டிப்பதையும், அடிக்கடி திட்டுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். தனது மகன்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மகள்களுக்குக் கொடுப்பதில்லை என்றும், தங்களை எப்போதும் தாழ்வாக நடத்துவதாகவும் அவர்கள் கருதியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகள்கள், நள்ளிரவில் தந்தை தூங்கிக் கொண்டிருந்தபோது கத்தியால் அவரது கழுத்தை அறுத்தும், வயிற்றில் குத்தியும் கொலை செய்துள்ளனர். பின்னர் ரத்தம் படிந்த துணிகளை வைக்கோல் போரில் மறைத்து வைத்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட ராம்பிரசாத்தின் மகன் அமித் குமார் அளித்த புகாரின் பேரில், அவரது சொந்த சகோதரிகள் இருவர் மீதும் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் ரத்தக் கறை படிந்த துணிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் பொதுவாக மகள்கள் தந்தையின் மீது மிகுந்த பாசம் கொண்டிருப்பார்கள் என்று நம்பப்படும் சூழலில், சொந்த மகள்களே தந்தையின் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
