
கேரள மாநிலம் கலமசேரியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர் விடுதியில் இரவு நேரத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் அகாஷ் (21) என்பவர், கொல்லம் மாவட்டத்தின் குலத்துபுழாவைச் சேர்ந்தவர். அவருடைய அறையில் இருந்து 1.909 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது. மேலும் அதித்யன் (21) மற்றும் அபிராஜ் (21) ஆகியோரிடம் இருந்து 9.70 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திரிக்காக்கரா உதவி ஆணையர் பி.வி. பேபி கூறுகையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு கல்லூரி விடுதியில் அதிகளவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. முன்னாள் மாணவர்களும் வெளியூர் நபர்களும் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறிய அவர், “விடுதியில் உள்ள மாணவர்களின் அனுமதி இல்லாமல் வெளியே உள்ளவர்கள் அறைகளை அணுக முடியாது என கூறியுள்ளார். மேலும், விடுதியை அடிக்கடி பார்வையிடும் நபர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.