
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ஒரு சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்த சிறுமிக்கு திருமணம் செய்ய மறுத்ததால், கிராமத்தில் செல்வாக்கு மிக்க ஒரு நபர் அவரை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.
சிறுமியின் உடலில் 50-க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை அந்தரங்க பாகங்களில் இருந்தன. கிராமத்தில் செல்வாக்கு மிக்க சஞ்சய் ராய் என்ற நபர் அந்த சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், மறுத்ததால் இந்த கொடூர செயலைச் செய்ததாகவும் கூறப்படுகிறது.
சிறுமியின் தாய், சஞ்சய் ராய் மற்றும் அவருடன் இருந்த ஐந்து பேர் மீது புகார் அளித்துள்ளார். சம்பவத்தன்று மூன்று பைக்கில் வந்த ஆறு பேர் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை கடத்திச் சென்று சீரழித்து கொலை செய்துள்ளனர். அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட வேண்டியவர்களை விரைந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.