மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷமீர் குன்னமங்கலம் என்பவர், நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்காக ₹3 கோடி நன்கொடையாக திரட்டி உதவி செய்துள்ளார். இதன் நன்றிக்கடனாக, அந்தக் குழந்தையின் குடும்பத்தினர் 2017 மாடல் இன்னோவா க்ரிஸ்டா கார் ஒன்றை பரிசாக வழங்கினர். இந்த நிகழ்வு கொண்டோட்டி, முண்டக்குளம் மலபார் அரங்கில் நடைபெற்றது, இதில் கொண்டோட்டி MLA டி.வி. இப்ராஹிம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆனால், இந்த பரிசு பெரிய சர்ச்சையை கிளப்பியது. “கார் கொடுக்க முடியுமெனில் நன்கொடைக்கு ஏன் விண்ணப்பித்தார்கள்?” என்று சிலர் கேள்வி எழுப்பினர். நன்கொடை வசூல் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லையா? என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் பலர் ஷமீரின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கினர்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஷமீர், “அந்த நிதியில் இருந்து ஒரு ரூபாயும் காருக்காக பயன்படுத்தப்படவில்லை” என்று தெளிவுபடுத்தினார். மேலும், இது புதிய கார் அல்ல, ₹12 லட்சம் மதிப்புள்ள 2017 மாடல் வாகனம் எனவும் விளக்கம் அளித்தார். இருப்பினும், சர்ச்சைகள் அதிகரித்ததால், ஷமீர் அந்த குடும்பத்தினரிடம் காரை திருப்பிக் கொடுத்து விட்டதாக தனது Facebook வீடியோவில் தெரிவித்துள்ளார்.