மத்தியப் பிரதேசம், ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த விமானப்படை வீரர் மோஹித், நேற்று திருமணம் செய்துகொண்டார். ஆனால் நாட்டின் பாதுகாப்பு அவசரத்தைக் கருத்தில் கொண்டு, திருமண நாளின் மறுநாளே தனது பதவிக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் காரணமாக, அவரது விடுப்பு இன்று ரத்து செய்யப்பட்டது.

மோஹித், ஏப்ரல் 17 முதல் 15 நாட்களுக்கு விடுப்பில் வந்திருந்தார். திருமணத்திற்காக வருகை தந்திருந்த அவர், தன்னுடைய மனைவி வந்தனாவுடன் திருமண சடங்குகளை முடித்தவுடன், தனது பதவிக்குச் செல்லும் அழைப்பு வந்ததையடுத்து, இன்று மாலை இசாபூர் விமானப்படை நிலையத்துக்குப் புறப்பட்டார்.

தன் மனைவியுடன்  தனிப்பட்ட நேரத்தை கழிக்க முடியாமல், கணத்த இதயத்துடன் விடைபெற்ற அவர், “இந்தியா அன்னையை பாதுகாக்கும் பணியில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது” என உருக்கமாகக் கூறினார்.

மணமகனின் முடிவை அனுசரித்து, மனைவி வந்தனாவும், அவரது தந்தையும், மோஹித்தின் பணிக்கடமையை புரிந்து கொண்டு பெருமையுடன் அனுப்பி வைத்தனர். “நாட்டின் கௌரவமே முதன்மை.

இது கொண்டாட்ட நேரமல்ல; கடமை செய்யும் தருணம்” என அவரது மாமனார் கூறினார். இந்த உணர்வுபூர்வ சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. மணமகனாகும் நாளிலும் தேசிய கடமையை முன்னிலை வைக்கும் வீரனின் நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.