தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவோணம்  ஒன்றியம் வெங்கரை ஊராட்சிக்குட்பட்ட இளையங்காடு கிராமத்தில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை  கொள்முதல் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பாக அந்த இடத்தில் தகர பந்தல் அமைக்கப்பட்டு, நெல் தூற்றும் எந்திரம் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக அங்கு கொண்டு வந்து வைத்துள்ளனர்.

இங்கு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து செயல்படுத்தக் கூடாது ஏனென்றால் நேரடி நெல் கொள்முதல் செய்யப்படும் இடம் தனிநபருக்கு சொந்தமானது எனவும் எதிர்ப்பு தெரிவித்து அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நெல் கொள்முதல் நிலையத்தை பொது இடத்தில் திறக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். இதன் காரணமாக அங்கு நெல் கொள்முதல் பணிகள் நடைபெறாமல் இருந்ததால் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பல நாட்களாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விற்பனைக்காக வைத்துள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். இதனைதொடர்ந்து சம்பந்தப்பட்ட நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளனர். அந்த சமயத்தில் அங்கு வந்த மற்றொரு தரப்பினர் இந்த இடத்தில் வைத்து நெல் கொள்முதல் செய்யக்கூடாது எனக் கூறி அந்த பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நெல் கொள்முதல் பணியை நிறுத்திவிட்டு நெல் தூற்றும் இயந்திரம் உள்ளிட்ட தளவாடப் பொருட்களையும் அங்கிருந்து எடுத்துக்கொண்டு ஊழியர்கள் சென்று விட்டனர். அதனால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு விவசாயிகள் அறுவடை செய்துள்ள நெல்லை  கொள்முதல் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.