
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று 11ஆம் வகுப்பு படிக்கும் தேவேந்திரன் என்ற மாணவனை அரசு பேருந்தை மறித்து கீழே இழுத்து போட்டு மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கபடி போட்டியில் ஏற்பட்ட மோதல் காரணமாக தாக்குதல் நடந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
ஸ்ரீவைகுண்டத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் தேவேந்திர ராஜ் மீது ஜாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தியதாக அவர்களுடைய பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டாரி மங்கலத்தில் அரியநாயகிபுரம் அணிக்கும் கெட்டியம்மாள்புரம் மணிக்கு இடையே கபடி போட்டி நடைபெற்ற நிலையில் அரியநாயகிபுரம் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கோப்பையுடன் தேவேந்திர ராஜ் உட்பட அணியினர் அனைவரும் கொண்டாடிய நிலையில் இதனை பொறுத்துக் கொள்ள முடியாத காழ் புணர்ச்சியால் தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அரசு பேருந்தில் தேர்வுக்கு சென்ற மாணவனை கீழே இறக்கி நான்கு விரல்களை வெட்டிய நிலையில் ஒருவிரல் கிடைக்கவில்லை மூன்று விரல்களை டாக்டர்கள் ஒட்டுகிறார்கள்.
தலையிலும் பல இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்ட நிலையில் மண்டை ஓடு வரை காயம் இருப்பதோடு முதுகிலும் பலத்த காயங்கள் இருக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தேவேந்திரராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஜாதி வெறி தாக்குதல் என்பது அதிகரித்து வருகிறது. இந்த ஜாதி வெறி ஆட்டங்களை தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அடக்க வேண்டும். மேலும் ஜாதி வன்கொடுமைகளை தடுக்கும் விதமாக தமிழக காவல்துறையில் இதற்கென ஒரு தனி பிரிவை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.