நெய்வேலியில் என்எல்சி சேதப்படுத்திய பயிருக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பாலு, அந்த நிலத்தில் நெல்லுக்குப் பதிலாக தக்காளி பயிரிட்டிருந்தால், கூடுதல் இழப்பீடு கிடைத்திருக்கும்” என்று கூறினார்.

அப்போது நீதிபதி, “தக்காளி பயிரிட்டிருந்தால், அரசே கொள்முதல் செய்திருக்கும்” என்று தெரிவித்தார். அரசு வழக்கறிஞர், “தக்காளிக்குப் பதில் மாம்பழம் பயிரிட்டிருக்க வேண்டும்” என்றார். இந்த விவாதம் நீதிமன்ற அறையில், சிரிப்பலையை ஏற்படுத்தியது.