டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியில் பள்ளிக்குச் சென்ற 15 வயது சிறுவன் ஒருவர், மூன்று நபர்களால் தாக்கப்பட்டு கத்திக்குத்து செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்த அந்த சிறுவனை, பள்ளி வாசலுக்கு அருகே எதிர்பாராத விதமாக மூன்று நபர்கள் சுற்றி வளைத்துள்ளனர். பின்னர், அவர்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுவனை நெஞ்சில் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த நிலையில், அதே இடத்தில் இருந்த பஹர்கஞ்ச் காவல் நிலையத்திற்கு துடிக்கத் துடிக்க சென்ற சிறுவனை கண்ட போலீசார், உடனடியாக மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவன் தீவிர சிகிச்சை பெறுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, பள்ளி மாணவர்களுக்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மோதல், இந்த தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்திய மூன்று சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.