ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாவட்டத்தின் பராத்பூர் பகுதியில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த நிரூபமா பரிதா (22), கடந்த ஜனவரி 24ஆம் தேதி வேலைக்கு சென்றபின் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் ஜனவரி 27ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடக்கத்தில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், திடீரென நிரூபமாவின் செல்பேசி எண் சுவிட்ச் ஆன் ஆக, அவர் இறந்திருக்க கூடும் என்ற சந்தேகம் உருவானது.
இந்த நிலையில், நிரூபமாவிற்கு தெபாசிஷ் பிசோய் (26) என்ற காதலன் இருப்பது தெரியவந்தது. தொழிலாளியாக பணியாற்றி வந்த அவர், போலீசாரின் விசாரணையில் நிரூபமாவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
தன்னை நிரூபமா ஏமாற்றுவதாக சந்தேகமடைந்ததால், அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும், பின்னர் அவரது உடலை குர்டா மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் புதைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், போலீசாரின் விசாரணையை தவறான திசையில் கொண்டு செல்லும் நோக்கத்தில், நிரூபமாவின் செல்பேசியை சுவிட்ச் ஆன் செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தெபாசிஷ் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் சோதனை நடத்தி, 8 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன நிரூபமாவின் சடலத்தை எலும்புக்கூடாக கண்டெடுத்துள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
