சேலம் மாவட்டம் ஸ்ரீவாரி கார்டன் வாய்க்கால் பாறை பகுதியை சேர்ந்த இனியவன் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த வங்கி ஊழியராக பணியாற்றி வரும் சௌமியா என்பவரை காதலித்த நிலையில் இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் திருவேங்கடம் அக்ரஹாரம் தெருவில் வசித்து வந்த நிலையில் இனியவன் மருத்துவ பயிற்சிக்காக ஆறு மாதம் வெளியூர் செல்ல வேண்டி இருந்தது.

இதனால் சௌமியாவை சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்குமாறு கூறியதால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் சௌமியா தனி அறையில் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூங்கிய நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த கணவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு சௌமியா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து மனைவி இறந்த துக்கத்தில் இருந்த இனியவன் திடீரென்று தற்கொலைக்கு முயன்று உள்ளார். மருந்து இல்லாத வெற்று ஊசியை தன்னுடைய உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.