உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட்டில் கடந்த மார்ச் மாதம் நடந்த சவுரப் கொலை வழக்கு தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அவரது மனைவி முஸ்கன் மற்றும் காதலன் சாஹில் ஆகியோரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கில் இருவரும் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். வழக்கறிஞர்களின் வாதங்களையும் ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிபதி, “ஜாமீன் வழங்க போதுமான காரணங்கள் இல்லை” என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்த வழக்கில் முக்கியமான அம்சம் என்னவென்றால், முஸ்கன் தற்போது கர்ப்பமாக இருப்பதாக அரசு வழக்கறிஞர் ரேகா ஜெயின் நீதிமன்றத்தில் வாதிட்டார். அதனைக் காரணமாக காட்டி ஜாமீன் வழங்க வேண்டுமென அவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அரசுத் தரப்பு, இது மிகக் கொடூரமான கொலைவழக்காக இருப்பதையும், முஸ்கனின் பெற்றோர்களே அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததையும் எடுத்துரைத்தது. மேலும், முஸ்கன் மற்றும் சாஹிலின் வெளிப்பாட்டின் அடிப்படையில், கொலைக்காக பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் சிமெண்ட் டிரம்ப் போன்ற முக்கிய ஆதாரங்களை போலீசார் மீட்டிருந்தனர்.

ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதும், நீதிமன்றத்தில் முஸ்கனும் சாஹிலும் கடுமையாக அழ ஆரம்பித்தனர். இந்த மனுவின் மீது மேல்முறையீடு செய்யும் வகையில், முஸ்கனின் வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டு வருகிறார். இதனிடையே, அரசு வழக்கறிஞராக ரேகா ஜெயின் வழக்கை விசாரித்து வருகின்றார். கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி முதல் இந்த வழக்கு கீழ்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

மார்ச் 3 ஆம் தேதி மீரட்டின் தண்டீரா பகுதியில் நடந்த இந்த கொலை, நாட்டையே அதிர்ச்சியடைய வைத்தது. முஸ்கன் மற்றும் சாஹில் சேர்ந்து சவுரப்பை கொலை செய்த பின், அவரது உடலை நான்கு துண்டுகளாக வெட்டி, நீல நிற டிரம்மில் சிமெண்டுடன் அடைத்து மறைத்துள்ளனர். இந்த கொடூர செயல் வெளிச்சத்திற்கு வந்ததும், போலீசார் இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, இந்த வழக்கு மே 3 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.