தமிழ் மகன் உசேன் நடுநிலை தவறிவிட்டதாக பன்னீர் செல்வம் தரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது..

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு. அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும். பொதுக்குழு தான் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டுமே தவிர முன்கூட்டியே அவை தலைவர் முடிவு செய்வது தவறு. வேட்பாளர் அறிவிப்பு மூலம் தமிழ் மகன் உசன் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது அவைத் தலைவரின் செயல்பாடு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக உள்ளது. ஒரு வேட்பாளரை முன்மொழியவோ வழிமொழியவோ பொதுக்குழு உறுப்பினருக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்றனர்.

மேலும் எடப்பாடி பழனிசாமியின் முகவராக செயல்பட்டுள்ளார் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி செயல்படவில்லை. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு யார் யார் வேட்பாளராக இருக்கின்றனர் என தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் பெயரை குறிப்பிடாமல் பழனிசாமி பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே அதிமுக சார்பில் செந்தில் முருகன் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவர் பெயரை குறிப்பிடவில்லை.

செந்தில் முருகன் பெயரை குறிப்பிடாமல் வேட்புமனு தாக்கல் செய்யாத தென்னரசு பெயர் மட்டுமே படிவத்தில் உள்ளது. முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு யார் வேட்பாளர் என்று தெரிவிக்க வேண்டிய கட்டாயம் அவை தலைவருக்கு உள்ளது. வேறு வேட்பாளரை முன்னிறுத்துவது குறித்து எந்த ஒரு வாய்ப்பும் வழங்கவில்லை. நடுநிலை தவறி ஒரு சிலரின் கைப்பாவையாக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் செயல்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பான செயல் என்று குற்றச்சாட்டை ஓபிஎஸ் தரப்பு முன்வைத்துள்ளது.