பாலிவுட் முன்னணி நடிகை கரீனா கபூர், விமான நிலைய பாதுகாப்புச் சோதனையின் போது வரிசையை மதிக்காமல் சென்றதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், மும்பை விமான நிலைய நுழைவு வாயிலில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அப்போது அங்கு வரும் நடிகை கரீனா கபூர், வரிசையில் நிற்காமல் நேரடியாகப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சென்று தனது பயணச்சீட்டை காண்பிக்கிறார். இதைப் பார்த்த அங்கிருந்த பயணிகள் அதிருப்தியுடன் அவரைப் பார்ப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Don’t Get Serious (@dontgetserious)

இந்த வீடியோவைப் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்று, “இந்திய நடிகை ஒருவர் வரிசையை உடைத்து நேரடியாக நுழைவு வாயிலுக்குச் செல்கிறார். பிரபலங்களுக்கு மட்டும் இந்தச் சலுகை ஏன்? மற்றவர்களுக்கும் அவசரப் பயணம் இருக்காதா? இது முறையற்ற செயல்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கரீனா கபூரின் இந்தச் செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்: இவர் என்ன வானத்திலிருந்து குதித்தவரா?” என ஒருவர் சாடியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் இப்படித்தான் செய்தார். இது அவருக்குப் பழகிப்போன ஒன்று என மற்றொரு பயணி தனது பழைய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். பிரபலங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முன்னுரிமை அளிக்கப்படுகிறது  எனப் பொதுவான கேள்விகளையும் பலர் எழுப்பியுள்ளனர்.அதே சமயம், கரீனா கபூரின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கரீனா கபூர் சட்டவிரோதமாக வரிசையை மீறவில்லை. அவர் ‘டிஜியாத்ரா’ செயலியைப் பயன்படுத்துகிறார். இந்தச் செயலியைப் பயன்படுத்துபவர்களுக்கு எனத் தனி வரிசை மற்றும் விரைவான அனுமதி வழங்கப்படுகிறது எனச் சிலர் விளக்கம் அளித்துள்ளனர். அவர் கரீனா கபூர். அவர் பொது வரிசையில் நின்றால் ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு தொந்தரவு செய்வார்கள், அதனால்தான் அவர் விரைவாகச் செல்கிறார் என்றும் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் தொழில்நுட்ப வசதியால் அவர் விரைவாகச் சென்றாரா அல்லது தனது செல்வாக்கை ஏற்றிச் சென்றாரா என்பது வீடியோவில் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், விதிகள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற குரல் சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது.