மத்திய பிரதேசத்தின் மோவ் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உஷா தாகூர், தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசியது தற்போது நாடுமுழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மந்திரியாகவும் இருக்கும் இவர், வாக்காளர்கள் பணத்திற்கு வாக்களிப்பதை கடுமையாக விமர்சித்தார். “அரசு பல உதவித் திட்டங்கள் மூலம் மக்கள் வங்கிக் கணக்கில் ஆயிரக்கணக்கில் பணம் பெறுகிறார்கள். இருந்தும் வாக்குகளை ரூ.1000, ரூ.500, சேலை, மது போன்ற பொருட்களுக்கு விற்றுவிடுகிறார்கள் என்றால், அது மனித குலத்திற்கே அவமானம்” என அவர் சாடினார்.

மேலும், “அப்படி பணம் வாங்கி வாக்களிப்பவர்கள், அடுத்த ஜென்மத்தில் நிச்சயம் ஒட்டகம், வெள்ளாடு, நாய், பூனை போன்றவையாக பிறப்பார்கள். இதை உங்கள் டைரியில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். ஜனநாயகத்தை விற்பவர்கள் இப்படித்தான் பிறக்கிறார்கள்” என்றார். மேலும், “நீங்கள் வாக்களிக்கிறீர்கள் என்பது ரகசியம் என்றாலும், கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். நானும் கடவுளுடன் நேரடி தொடர்பில் இருக்கிறேன். எனவே என்னை நம்புங்கள்” என உஷா தாகூர் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகின்றன. ஒரு மக்களாட்சியில் வாக்காளர்கள் மீது இவ்வாறு அவமதிப்பாக பேசுவது சரியானதா என பொதுமக்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உஷா தாகூரின் உரை அடங்கிய வீடியோ தற்போது வைரலாகி, நாடு முழுவதும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பா.ஜ.க. மேலிடம் என்ன பதிலளிக்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.