
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் தர்மசாலாவில் ஒரு பிரபலமான கோவில் அமைந்துள்ளது. இந்த தர்மஸ்தலா கோவிலில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வரும் ஒருவர் தற்போது தட்சிண கன்னடா காவல்துறையினரிடம் ஒரு பரபரப்பு புகாரினை கொடுத்துள்ளதோடு தன்னுடைய அடையாளங்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அதாவது தர்மஸ்தலா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் எரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததோடு பின்னர் அந்த உடல்களை புதைக்க எரிக்க தன்னை கட்டாயப்படுத்தியதாக அந்த துப்புரவு தொழிலாளி கூறியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 1998 முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்றதாகவும் பள்ளி மாணவிகள் உட்பட ஏராளமான பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் திடுக்கிடும் தகவல்களை கூறி அதிர வைத்துள்ளார். 10 வருடங்களுக்கு பிறகு தன்னுடைய மனசாட்சி உறுதியதால் தற்போது இந்த உண்மையை வெளியே சொன்னதாகவும் தயவு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வாங்கி கொடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த நபர் தன்னுடைய புகார் உடன் சமீபத்தில் தோண்டி எடுக்கப்பட்ட உடல்களின் எச்சங்களையும் பகிர்ந்துள்ளதோடு தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவர் கடந்த 11 வருடங்களுக்கு முன்பாக தான் புதைத்த உடல்களை தோண்டி எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரோடு கூறிய நிலையில் வேறொரு மாநிலத்தில் குடும்பத்தோடு தலைமறைவாக வாழ்ந்ததாகவும் தற்போது தான் இங்கு வந்து உண்மையை கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
தலித் நபரான அவர் ஆரம்பத்தில் கோவில்களை சுற்றி தூய்மை செய்ததோடு நேத்ராவதி ஆற்றையும் சுத்தம் செய்துள்ளார். அப்போது அவர் பெண்களின் பிணத்தை பார்த்ததோடு சில பிணங்களில் ஆடை இல்லாமல் இருந்ததையும் பின்னர் உடல்களில் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு என்னுடைய மேற்பார்வையாளர் அந்த உடல்களை ரகசியமாக புதைக்கும்படி என்னிடம் கூறிய நிலையில் நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர் என்னை கொடூரமாக தாக்கியதோடு என்னுடைய குடும்பத்தையும் கொலை செய்வதாக மிரட்டியதால் வேறு வழியின்றி அதை செய்ததாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமி உள்ளாடை இல்லாமல் பள்ளி பேக் மற்றும் சீருடையில் பிணமாக கிடந்த நிலையில் அந்தப் பள்ளி பையுடன் அந்த சிறுமியை குழி தோண்டி புதைக்க சொன்னார்கள். மற்றொரு சம்பவத்தில் 20 வயது இளம் பெண்ணின் முகம் ஆசிட்டால் எரிக்கப்பட்டிருந்தது. அந்தப் பெண்ணின் உடலை அவர் எரித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு என் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி என்னுடைய மேற்பார்வையாளருக்கு தெரிந்த ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதால் பின்னர் நான் குடும்பத்தோடு தப்பி ஓடிவிட்டேன். நான் அங்கு 10 வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் தர்மசாலாவுக்கு மீண்டும் வந்து நான் புதைத்த உடல்களை தோண்டி எடுத்து அதனை போட்டோ எடுத்து தற்போது காவல்துறையினிடம் சமர்ப்பித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
அந்த நபர் தனக்கு பாதுகாப்பு முழுமையாக கிடைத்தவுடன் தன்னை கட்டாயப்படுத்தியவர்களின் பெயர்களை கூறுவதாகவும் உண்மையை கண்டறிய தனக்கு எந்த சோதனை வேண்டுமானாலும் செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் தற்போது அவர் கூறிய தகவலின்படி போலீசார் உடல்களை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர்.