பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்ட நிலவரங்கள், நீண்டகாலமாக முதலமைச்சராகப் பதவி வகிக்கும் நிதிஷ்குமாரின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

இன்று (நவ.14) காலை 9:30 மணி நிலவரப்படி, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கும் பாஜக, 71 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமோ (JDU) 58 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுப் பின்தங்கியுள்ளது. கூட்டணிக்குள் பாஜக அதிக இடங்களைப் பெறும் நிலை உருவாகி இருப்பதால், ஐக்கிய ஜனதா தளம் தனது முதன்மைக் கூட்டணிப் பங்காளியை விடப் பலவீனமடைந்துள்ளது.

ஏற்கனவே, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து முன்கூட்டியே தெளிவாக அறிவிக்கப்படாத நிலையில், குறைந்த இடங்களைப் பெறும் நிலையில், நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது என்பது சந்தேகம் தான் என்று பிகார் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை இறுதி நிலையை எட்டும்போது, நிதிஷ்குமார் தனது முதலமைச்சர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வாரா அல்லது கூட்டணியில் புதிய தலைமை உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு பீகார் அரசியலில் எழுந்துள்ளது.