இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களம் இறங்கியதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய மிக இளைய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
தனது அறிமுகம் இன்னிங்ஸிலேயே ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளில் அதிரடியாகத் தலா ஒரு சிக்ஸர் அடித்து, தான் ஏன் எதிர்கால சூப்பர் ஸ்டார் என்பதை இந்த இடதுகை பேட்ஸ்மேன் நிரூபித்துள்ளார். இருப்பினும், 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தபோது அவர் ஆட்டமிழந்தார். இந்த அறிமுகப் போட்டி குறித்துப் பேசிய இந்திய அணியின் முன்னாள்உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர், “வைபவ் சூர்யவன்ஷிக்கு உண்மையான சவால்கள் இப்போதுதான் தொடங்கியுள்ளன; முதல் போட்டி எப்போதும் எளிதானதுதான், ஆனால் போகப் போக உலகத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் போது அவரது மன உறுதிக்கு பெரிய சோதனை காத்திருக்கிறது” என்று எச்சரித்தார்.
மேலும், அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 175 ரன்கள் குவித்தது, சமீபத்திய ஐபிஎல் 2026 தொடரில் 237-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 776 ரன்கள் குவித்து அசத்திய வைபவ், நாட்டில் உள்ள மற்ற 15 வயது சிறுவர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளார் என்று நாயர் வேடிக்கையாகக் கூறினார்.
“இனி இந்தியாவில் உள்ள மற்ற 15 வயது சிறுவர்களின் பெற்றோர் சோபாவில் அமர்ந்து கொண்டு, ‘அங்கே பார், வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக விளையாடுகிறான், நீ என்ன செய்கிறாய்?’ என்று நிச்சயம் ஒப்பிடுவார்கள்; அதனால் மற்ற சிறுவர்களுக்கு இது கடினமான காலம்தான்” என்று அவர் கூறியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, வைபவ்வின் இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிமுகப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
