இந்தியாவில் கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் என்றால் கத்திரி வெயில் நாளை அதாவது மே 29ஆம் தேதி முடிவடைவதால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை நீடிக்கும். இந்த நான்கு மாதத்தில் மே மாதம் மட்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வருடம் மே 4 ஆம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் நாளையுடன் முடிவடைகிறது.

இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. பல இடங்களிலும் வெப்ப அளவு 100- ஐ கடந்து பதிவானது. மேலும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.