தமிழ்நாட்டின் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் நான் முதல்வன் கல்லூரி கனவு 2025 திட்டத்தை நேற்று சென்னையில் துவங்கி வைத்தார். இதனையடுத்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்த விழா மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் தங்கவேல் பேசியதாவது, பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் எதிர்கால கனவை நினைவாக்கும் வகையில் பட்டப்படிப்புகள் என்னென்ன உள்ளது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் எந்த கல்லூரியை தேர்வு செய்வது என்பது குறித்தும், நான் முதல்வன் கல்லூரி கனவு 2025 திட்டத்தின் மூலம் படிப்பினை முடித்த பின்பு கிடைக்கும் வேலை வாய்ப்புகளும், போட்டி தேர்வுகளும், தொழில் வழிகாட்டுதல், ஊக்கப்படுத்துதல், வங்கி கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்களை தலைசிறந்த வல்லுனர்கள் வழிகாட்டுகின்றனர்.

இதனால் இதுபோன்ற நிகழ்வுகள் மாணவ மாணவிகளுக்கு நல்ல எதிர்காலத்தை அடைவதற்கு வழிவகை செய்யும். எனவே தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ள தகவல்களை வழங்கப்படுகிறது குறிப்பாக எதிர்காலத்தில் எந்தெந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

அதிலும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப எப்படி தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவுரை வழங்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து வெவ்வேறு வகையான துறைகள் குறித்து பல்வேறு வல்லுநர்கள் பேசினர். மேலும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சார்ந்த கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.