பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை கங்கனா ரணாவத் பாஜக கட்சியில் இணைந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்றார். இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை கங்கனா அரசியல் வாழ்க்கையை விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது, அரசியல் வாழ்க்கையை ரசிக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். இது ஒரு வித்தியாசமான சமூக சேவை வாழ்க்கை. நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. பெண்கள் பிரச்சினைக்காக நான் போராடிய நிலையில் பாதாள சாக்கடை பிரச்சனை சாலை பிரச்சினைகள் போன்றவைகள் குறித்து என்னிடம் பேசுகிறார்கள்.

நான் ஒரு எம்பி ஆக இருக்கும் நிலையில் என்னிடம் பஞ்சாயத்து அளவிலான பிரச்சனைகளை கூறுகிறார்கள். எம்எல்ஏக்களிடம் கூற வேண்டிய பிரச்சனைகளை என்னிடம் சொல்கிறார்கள். சாலை போட வேண்டும் என்று கூறுகிறார்கள். இது மாநில அளவில் ஆன பிரச்சனை என்று சொன்னால் உங்களுடைய சொந்த பணத்தில் செலவு செய்யுங்கள் என்கிறார்கள்.

அதன் பிறகு பிரதமராக விருப்பப்படுகிறீர்களா என்று நிருபர் எழுப்பிய கேள்விக்கு, அந்தப் பதவிக்கு போதுமான தகுதி என்னிடம் கிடையாது. ஏனெனில் நான் சமூகப் பணியை பின்னணியாக கொண்டவள் கிடையாது. மிகவும் சுயநலமான வாழ்க்கை தான் வாழ்ந்துள்ளேன் என்று கூறினார். மேலும் அரசியல் வாழ்க்கை குறித்து நடிகை கங்கனா ஓப்பனாக பேசியது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியமாக பேசப்படுகிறது.