பாஜக கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிமுகவில் இருந்து விலகியது கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, அதிமுகவில் இருந்து விலகியது எனக்கு சற்று வருத்தம் தான். ஜெயக்குமார் என்னை அதிமுகவுக்கு மீண்டும் அழைத்தார். இதேபோன்று எடப்பாடி பழனிச்சாமியும் மீண்டும் என்னை அதிமுகவுக்கு அழைத்தார். எடப்பாடி பழனிச்சாமி எனக்கு நெருங்கிய நண்பர். நான் அமைச்சராக இருக்கும்போது எனக்கு கீழ் செயல்பட்ட ஒரு துறையில் எடப்பாடி பழனிச்சாமி தலைவராக இருந்ததால் அப்போதிருந்தே எனக்கும் அவருக்கும் நெருக்கம் அதிகம். இருப்பினும் நான் மீண்டும் அதிமுகவில் இணைய மாட்டேன் என தெளிவாக சொல்லிவிட்டேன்.

திமுகவில் சேர்வதற்கு வாய்ப்பே கிடையாது. அப்பாவு அழைத்தாலும் நான் கண்டிப்பாக திமுகவில் மட்டும் இணைய மாட்டேன். அரசியல் கடந்தும் நான் சிலருடன் நட்பு பாராட்டுவதால் நான் கட்சி மாற போகிறேன் என அடிக்கடி தகவல்கள் வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் அதிமுகவில் இருந்து விலகியது சற்று வருத்தமாக இருப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியதால் அவர் பாஜகவில் இருந்து விலகலாம் என்ற கருத்து பரவுகிறது. ஏற்கனவே பாஜகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வரும் நிலையில் தற்போது எம்எல்ஏ நயினார் நாகேந்திரனும் அதிமுகவில் இணைவதாக வந்த தகவல் அண்ணாமலைக்கு பேரிடியாக விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.