குவைத் நாட்டில் உள்ள மங்காப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 49 இந்தியர்கள் பரிதாபமாக ‌இறந்தனர். அதன் பிறகு 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டையே உலுக்கிய இந்த தீ விபத்தில் இறந்தவர்களின் உடல் இன்று இந்தியா கொண்டுவரப்படுகிறது.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் வரை நிவாரணம் அறிவித்துள்ளார். இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீயணைப்பு துறையினர் அதற்கான காரணத்தை கூறியுள்ளனர். அதன்படி கட்டிடத்தில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என நேற்று தீயணைப்பு துறையினர் அறிவித்தனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்ததன் மூலம் இந்த தகவல் தெரிய வந்ததாக தீயணைப்பு துறையினர் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.