ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் என் இ டபிள்யூ எனப்படும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் இணைந்து இந்தியாவில் மொத்தம் உள்ள 31 மாநிலங்களில் ஆய்வு செய்து பணக்கார முதல்வர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் தேர்தல் பிரமாணம் பத்திரங்களை ஆய்வு செய்து அதன் மூலம் தயார் செய்யப்பட்டுள்ளது.இந்த பட்டியலின்படி இந்தியாவில் உள்ள மொத்த முதல்வர்களின் சொத்து மதிப்பு 1630 கோடியாக இருக்கும் நிலையில் முதலிடத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இருக்கிறார்.

இவருடைய சொத்து மதிப்பு 931 கோடியாக இருக்கும் நிலையில் இரண்டாம் இடத்தில் இமாச்சல் பிரதேச மாநிலத்தின் முதல்வர் டெமா காண்டு 332 கோடி சொத்துடன் இருக்கிறார். மூன்றாம் இடத்தில் 51 கோடி சொத்துடன் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், நான்காம் இடத்தில் நாகலாந்து முதல்வர் நெய்பியு ரியோ 46 கோடி சொத்துடனும், ஐந்தாம் இடத்தில் 42 கோடி சொத்துடன் மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவும் இருக்கிறார்கள். ஆறாம் இடத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 38 கோடி சொத்துடன் இருக்கிறார்.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி 30 கோடி சொத்துடன் ஏழாம் இடத்திலும், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் 25 கோடி சொத்துடன் எட்டாம் இடத்திலும் இருக்கிறார்கள். இந்த பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சுமார் 8 கோடி சொத்துடன் ‌ 14ஆம் இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் ஏழை முதல்வர்கள் பட்டியலில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முதலிடத்தில் இருக்கிறார். இவர் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளார். இவருடைய  மொத்த சொத்து மதிப்பு 15 லட்ச ரூபாய்.

மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜியின் சொத்து மதிப்பு 15 லட்சம் ஆகத்தான் இருக்கிறது. இந்த ஏழை முதல்வர்கள் பட்டியலில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா 55 லட்சம் சொத்துடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அதன்பிறகு இந்த ஏழை முதல்வர்கள் பட்டியலில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஒரு கோடி சொத்துடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். மேலும் முதல்வர்களின் கடன் பட்டியலும் வெளியாகியுள்ள நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த கடனும் இல்லை என்று அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.