நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தொண்டர்களின் சோர்வை நீக்கும் வகையில் மிக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தத் தேர்தலில் அதிமுக எதிர்பார்த்தபடி ஆட்சி அமைக்க முடியாமல் போயிருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்தமாக நாம் வெற்றி வாய்ப்பை இழந்துவிடவில்லை என்று புள்ளிவிவரங்களோடு ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் அளித்துள்ள தீர்ப்பையும், கட்சியின் பின்னடைவையும் தான் முழுமையாக, மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தல் களம் நமக்குக் கொடுத்துள்ள வாக்குகளைச் சுட்டிக்காட்டிய இபிஎஸ், “இந்தத் தேர்தலில் அதிமுக தனித்து மட்டுமே 1 கோடியே 4 லட்சத்து 62,146 வாக்குகளைப் பெற்றுள்ளது. நம்முடைய கூட்டணியோடு சேர்த்து மொத்தம் 1 கோடியே 34 லட்சம் வாக்குகள் நமக்குக் கிடைத்துள்ளன” என்று நெஞ்சுயர்த்திப் பேசியுள்ளார்.
இவ்வளவு பெரிய வாக்கு வங்கியை வைத்துள்ள அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்களான தொண்டர்கள் யாரும் இந்தத் தோல்வியைக் கண்டு எள்ளளவும் துவண்டுவிடத் தேவையில்லை என்றும், இந்த வீழ்ச்சி தற்காலிகமானது தான், நாம் மீண்டும் பீனிக்ஸ் பறவை போல மீண்டெழுவோம் என்றும் தனது அறிக்கையில் எடப்பாடியார் இமாலய நம்பிக்கையை விதைத்துள்ளார்.
