தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் போது பேசிய நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்பது சாதாரண ஏழை எளிய மக்களுக்கான கட்சி என்றும் பண்ணையர்களுக்கான கட்சி கிடையாது என்றும் கூறினார். அதாவது நாங்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கூறுவதாக சொன்ன விஜய் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான் இன்று பல சாதனைகளை புரிந்துள்ளனர் என்றார். அதோடு முன்பு பண்ணையார்கள் தான் ஆட்சி செய்ததாகவும் தற்போது ஆட்சியாளர்களே பண்ணையார்களாக மாறிவிட்டதாகவும் திமுகவை விமர்சித்தார். இதற்கு திமுக கட்சியின் செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, திமுக பல காலமாக ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் செய்து வருகிறது. திமுகவில் யாரும் பண்ணையார் ஆகவில்லை. நாங்கள் வீட்டுக்குள் இருப்பவர்கள் கிடையாது சிறை செல்ல தயாராக இருக்கிறோம். விஜயின் அரசியல் அறிவு அவ்வளவுதான். கடந்த 1938 ஆம் ஆண்டு நீதி கட்சி ஆட்சியை இழந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது ஹிந்தி திணிக்கப்பட்டது. அப்போது தமிழ் அறிஞர்கள் அனைவரும் இந்திக்கு எதிராக போராட்டத்தை நடத்தி திருச்சியில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்தனர். இந்தப் போராட்டத்தில் திராவிட கழகத்தினரும் ஈடுபட்டனர். இதெல்லாம் விஜய்க்கு தெரியாது.கடந்த 1952 ஆம் ஆண்டு ராஜாஜி ஆட்சிக்கு வந்த போது இங்கு ஹிந்தி மொழி கற்பிக்கப்படும் என்று சொன்னதை அப்போதே திராவிட இயக்கம் எதிர்த்தது. மேலும் தொகுதி மறு சீரமைப்பு விஷயத்தில் பாஜக சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று கூறினார்.