ஒடிசா மாநிலத்தில் 24 ஆண்டுகளாக ஆட்சி செய்த பிஜு ஜனதா ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து  இந்த முறை பாஜக ஆட்சியை கைப்பற்றியது நாடு முழுவதும் கவனிக்கத்தக்க விஷயமாக மாறியுள்ளது. அதன்படி ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. அதே சமயத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். கடந்த 2000-ம் ஆண்டு முதல் முறையாக ஒடிசாவில் பிஜூ ஜனதா வெற்றி பெற்று நவீன் பட்நாயக் முதல்வராக பொறுப்பேற்றார். இந்த தேர்தல் மற்றும் கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்ற பிஜூ ஜனதா தளம் கடந்த 2009, 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

இதனால் 5 முறை ஒடிசாவின் முதல்வரானவர் என்ற பெருமையை நவீன் பட்நாயக் பெற்றார். இந்நிலையில் இந்த முறை நடைபெற்ற தேர்தலில் ஒடிசா மக்களுக்காக நவீன் பட்நாயக் அரசு என்ன செய்தது என்ற கேள்வியை முன்வைத்த பாஜக பூரி ஜெகநாதர் கோவில் சாவி எங்கே என்பது குறித்தும் தீவிர பிரச்சாரம் செய்தது. ஒடிசா மக்களுக்கு மிகவும் நெருக்கமான பூரி ஜெகநாதர் ஆலயத்தை முன்வைத்து பாஜக பிரச்சாரம் செய்ததே நவீன் பட்நாயக் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் ஒடிசா மாநிலத்தை தமிழர் ஆளலாமா என்ற கேள்வியை முன்வைத்த அமித்ஷா தமிழான வி.கே பாண்டியனை முன்வைத்து மிக தீவிர பிரச்சாரம் செய்தார். இப்படி பாஜக மிகப்பெரிய வியூகம் அமைத்து பிரச்சாரம் செய்தது தான் ஒடிசாவில் வெற்றி பெற காரணமாக அமைந்துள்ளது என்பதை நிதர்சனமான உண்மை ஆகும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது.