உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில், 16 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு, துப்பாக்கி முனையில் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவின் ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தான். அப்போது அங்கு காரில் வந்த கும்பல், சிறுவனை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று காரில் ஏற்றியது.

காரில் கடத்திச் செல்லப்பட்ட அந்தச் சிறுவனை, கடத்தல்காரர்கள் பல மணி நேரம் நகரின் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது காரின் உள்ளேயே சிறுவனின் ஆடைகளைக் களைந்து, மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், சிறுவனின் தலையில் துப்பாக்கியை வைத்து, ரூ.5 லட்சம் தரவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதற்கான காலக்கெடுவையும் அன்று காலை வரை நிர்ணயித்துள்ளனர்.

சுமார் 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அதிகாலை 7 மணியளவில் கடத்தல்காரர்கள் சிறுவனை விடுவித்தனர். பலத்த காயங்களுடனும், பெரும் மன அதிர்ச்சியுடனும் வீடு திரும்பிய சிறுவன் நடந்தவற்றைக் கூறவே, அவனது குடும்பத்தினர் பீதியடைந்தனர்.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த இஷு யாதவ் மற்றும் அனுஜ் தீட்சித் ஆகியோர் மீது சிறுவனின் குடும்பத்தினர் தல்கடோரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அப்பகுதியில் ரவுடி கும்பலாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

புகார் அளிக்கப்பட்டு, தாக்குதல் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் லக்னோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.