உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் (Fatehpur) மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக மாமனார் வீட்டுக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர், கிராம மக்களின் தற்காப்புத் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபதேபூரைச் சேர்ந்த பிகம்பூர் கிராமத்தில் புதன்கிழமை நள்ளிரவில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆஷாபூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50 வயதான பவன் விஸ்வகர்மா என்பவர், புதன்கிழமை மாலை 4 மணியளவில் தனது மனைவியின் வீடான பிகம்பூருக்கு வந்துள்ளார். பவனுக்கும் அவரது மனைவி குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாகத் தகராறு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக புதன்கிழமை நள்ளிரவு நிலைமை முற்றிலுமாக விபரீதமானது.
நள்ளிரவு சுமார் 2 மணியளவில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது பவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதத்தால் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். திடீர் தாக்குதலாள அதிர்ந்துபோன குடும்பத்தினர் அலறினர். இந்தத் தாக்குதலில் பிரதீப் (20), ராஜேஷ், புஷ்பா, ராஜ்கரன் (22) மற்றும் கோரே (18) ஆகிய ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
சத்தம் கேட்டு அலறியடித்து ஓடிவந்த அக்கம் பக்கத்து கிராம மக்கள், பவன் தப்பியோட முயன்றபோது அவரை மடக்கிப் பிடித்தனர். அப்போது ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பவனும் படுகாயமடைந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த பவன் மற்றும் காயமடைந்த ஐவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பவன் விஸ்வகர்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் தொடர்ந்து, குடும்பத் தகராறுக்கான உண்மையான காரணம் என்ன, பவன் எதற்காக இந்தத் தாக்குதலைத் தொடுத்தார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கிராம மக்கள் தாக்கியதில் பவன் உயிரிழந்த சூழ்நிலை குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு மூத்த காவல் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திலிருந்து முக்கியச் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் இந்தச் சம்பவத்தால் பிகம்பூர் கிராமத்தில் கடுமையான பதற்றமான சூழல் நிலவி வருவதால், போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது.
