மத்தியப் பிரதேச மாநிலம், சத்னா மாவட்டத்தில் உட்பட்ட பகுதியில், கணவனைக் கொன்று ஆற்றங்கரையில் வீசிய வழக்கில், அவரது மனைவியையும், மனைவியின் காதலனையும் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒரு திரைப்படத்தின் திருப்பங்களைப் போல அமைந்த இந்த வழக்கை, சம்பவம் நடந்த 72 மணி நேரத்திற்குள் போலீஸார் தீர்த்து வைத்துள்ளனர்.

அதாவது சத்னா பகுதியைச் சேர்ந்தவர் கௌஷலேந்திர பிரதாப் சிங் என்கிற ‘டப்பு’ (45). கடந்த மார்ச் 4-ஆம் தேதி இரவு அவர் திடீரென தனது வீட்டிலிருந்து மாயமானார். குடும்பத்தினர் அவரைத் தேடி வந்த நிலையில், மறுநாள் மார்ச் 5-ஆம் தேதி, கிராமத்திற்கு வெளியே உள்ள ஆற்றங்கரையில், தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் டப்புவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் அபிஷேக் பாண்டே தலைமையிலான குழுவினர் விசாரணையைத் தொடங்கினர். டப்புவின் மனைவி குசும் சிங் (எ) ரீனாவிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறி போலீஸாரைத் திசைதிருப்ப முயன்றார். இதனால் அவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. போலீஸார் சைபர் செல்லின் உதவியுடன் குசும் சிங்கின் அலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தனர். அப்போது, சம்பவம் நடந்த நாளில், உத்தரப் பிரதேச மாநிலத்தை சந்தீப் படேல் (32) என்பவருடன் குசும் சிங் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் சந்தீப் படேலை முற்றுகையிட்டு கைது செய்தனர்.

போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குஜராத்தில் ஒன்றாக வேலை செய்தபோது, டப்பு மற்றும் சந்தீப் படேல் நண்பர்களாக இருந்துள்ளனர். அந்த சமயத்தில், சந்தீப் படேலுக்கும் டப்புவின் மனைவி குசும் சிங்கிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை டப்பு கடுமையாக எதிர்த்துள்ளார். இதனால், டப்புவை ஒழித்துக் கட்டத் திட்டமிட்ட இருவரும், அவரைத் தீர்த்துக் கட்ட முடிவெடுத்துள்ளனர்.

திட்டப்படி, மார்ச் 3-ஆம் தேதி குஜராத்திலிருந்து கிளம்பிய சந்தீப் படேல், மார்ச் 4-ஆம் தேதி சத்னா வந்தடைந்துள்ளார். அன்று மாலை, மது அருந்தலாம் என்று கூறி டப்புவை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு டப்பு போதையில் இருந்தபோது, கனமான கல்லால் அவரது தலையில் தாக்கி சந்தீப் படேல் படுகொலை செய்துள்ளார். கொலை செய்த கையோடு, தனது இருசக்கர வாகனத்தில் பண்டாவுக்கு அவர் தப்பிச் சென்றதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

மேலும்  குற்றவாளியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கல் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸார் பறிமுதல் செய்தனர். கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட மனைவி குசும் சிங் மற்றும் காதலன் சந்தீப் படேல் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். துரிதமாகச் செயல்பட்டு கொலையாளிகளைக் கண்டறிந்த போலீஸாருக்கும், சைபர் செல் பிரிவினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.