பிரபல நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ மனோகர், நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘A1’ திரைப்படத்தில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் மற்றும் சம்பளப் பிரச்சனை குறித்து வெளிப்படையாகப் பேசி ஆதங்கப்பட்டுள்ளார். சந்தானம் மற்றும் லொள்ளு சபா குழுவினர் அனைவரும் ஆரம்பகாலத்திலிருந்தே ஒன்றாகப் பயணித்த நண்பர்கள் என்ற போதிலும், தனக்கு உரிய அங்கீகாரமும் ஊதியமும் கிடைக்கவில்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். ​இதுகுறித்து அவர் பேசுகையில், ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் தயாரித்து நடித்த ‘A1’ திரைப்படத்தில் நடித்ததற்காக தனக்கு ஒரு நாள் சம்பளமாக வெறும் 6,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பழைய நட்பு மற்றும் உரிமையின் காரணமாக, “உன்னிடம் என்னால் அடித்துப் பேச முடியவில்லை, பார்த்து கொஞ்சம் கூடுதலாகக் கொடு” என்று சந்தானத்திடம் நேரடியாகவே தான் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் அதற்கு எந்தவித மதிப்பும் அளிக்காமல் 6,000 ரூபாயை மட்டும் கையில் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டதாக மனோகர் வருத்தத்துடன் கூறியுள்ளார். திரையுலகில் நீண்ட காலமாக இருக்கும் தனக்கு நண்பரின் படத்திலேயே இப்படி ஒரு நிலை ஏற்பட்டது குறித்து அவர் பேசியுள்ள இந்தத் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.