தென்கிழக்கு டெல்லி அலி காவ்னில், முதியவர் ஒருவர் பட்டப்பகலில் தாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 24ஆம் தேதி ரகுராஜ் என அடையாளம் காணப்பட்ட முதியவர், வீட்டிலிருந்து காரில் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது தாக்குதல் நடந்துள்ளது.

திடீரென மோஹித் என்பவர் மற்றும் அவரது கூட்டாளிகள் ரகுராஜின் காரை நிறுத்தி, கண்ணாடியை உடைத்து, அவரை வாகனத்திலிருந்து வெளியே இழுத்துச் சென்று கம்பால் அடித்துள்ளனர். இதனால் ரகுராஜ் கடுமையாக காயமடைந்து, இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

அந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. வீடியோவில், ரகுராஜ் வலியால் அலறும் நிலையில்,  ஒருவர் சாலையின் நடுவே அவரை தொடர்ந்து தாக்குவதும், அருகில் இருந்தவர்கள் தலையிட முயன்றபோது மிரட்டப்பட்டதும் தெரிகிறது. இந்த தாக்குதல் தனிப்பட்ட விரோதத்தின் விளைவாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, குற்றவாளி மோஹித் அலி காவ்னில் ஒரு நிலத்தை வாங்கி கட்டுமானப் பணிகள் மேற்கொண்டிருந்தார். அந்த கட்டிடம் அனுமதியின்றி கட்டப்பட்டது காரணமாக, டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) அதை இடித்தது. அந்த புகாரை ரகுராஜ் அளித்தார் என சந்தேகித்த மோஹித், பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டு அவரை தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.