உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்திய நகரின் பரபரப்பான தெருவில், ஸ்கூட்டரில் சென்ற பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரின் செயல்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

கடந்த மே 24 ஆம் தேதி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவில்,  ஸ்கூட்டரில் வந்த பெண் அதிகாரி ஒருவர்,  ஒரு மின் ரிக்‌ஷா ஓட்டுநரை தாக்கும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது.

அந்த ரிக்‌ஷாவில் பயணித்த ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவரிடமும் அந்த பெண் இன்ஸ்பெக்டர் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அச்சம்பவத்தின் போது, அதிகாரி ஹெல்மெட் இல்லாமல் போக்குவரத்து விதிகளை மீறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் அயோத்தியாவின் பரிக்ரம மார்க்கில் உள்ள பிரம்மகுண்ட் அருகே நிகழ்ந்தது. அந்த இடத்தில் இருந்த பொதுமக்கள், சம்பவத்தை நேரில் பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்ததாகவும், பின்னர் பெண் அதிகாரியின் அத்துமீறல் நடத்தைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

பொதுமக்கள் கூடியதும், அந்த பெண் இன்ஸ்பெக்டர் தனது ஸ்கூட்டரில் வேகமாக தப்பிச் சென்றார். வீடியோவில், அவர் முதலில் ரிக்‌ஷா டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார், பின்னர் தனது மொபைலை எடுத்து புகைப்படம் எடுக்கிறார். பிறகு, அவர் ரிக்‌ஷா ஓட்டுநரின் மீது கை தூக்கும் காட்சி மக்கள் இடையே கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் ராம் ஜன்மபூமி காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் இன்ஸ்பெக்டர் ஷிகா சிங் என கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி CO அசுதோஷ் திவாரி கூறியதாவது, “இந்த விவகாரம் என் கவனத்திற்கு வரவில்லை. யாராவது அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தால், விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என தெரிவித்தார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், பெண் அதிகாரியின் செயலை பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும்  காவல்துறையினரிடம் மக்கள் நியாயமான விசாரணையும், உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.