ஜெய்ப்பூரில் பட்டப்பகலில் கர்ப்பிணிப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்டு, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நபர், போலீஸ் நெருக்கடி காரணமாக மத்தியப் பிரதேச நீதிமன்றத்தில் முறையில் சரணடைந்தார். கடந்த மார்ச் 26-ஆம் தேதி நடந்து சென்றுகொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணை, பின்னால் இருந்து அணுகிய நபர் ஒருவர் அவரிடம் மிக மோசமான முறையில் அநாகரீகமாக நடந்துகொண்டார். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களையும், பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், அந்த நபர் குவாலியரைச் சேர்ந்த ராகுல் குர்ஜார் என்பது தெரியவந்தது.
குற்றவாளி ராகுல் குர்ஜார் மீது ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் கொள்ளை, வழிப்பறி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருந்த அவரைப் பிடிக்க ராஜஸ்தான் போலீஸார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். ராஜஸ்தான் போலீஸாரின் கடுமையான நடவடிக்கைக்குப் பயந்த ராகுல் குர்ஜார், ஒரு திட்டமிட்ட வியூகத்துடன் புதன்கிழமை மதியம் 2:30 மணியளவில் மொரேனா மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு பதிவான ஒரு கொள்ளை வழக்கில் ஆஜராகாமல் இருந்ததற்காக அவர் அங்கு சரணடைந்தார். அவரைப் பிடிப்பதற்காக ராஜஸ்தான் போலீஸ் குழு மொரேனா செல்வதற்குள், நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதனால் அவரை உடனடியாகக் காவலில் எடுக்க முடியாமல் போலீஸார் ஏமாற்றமடைந்தனர்.
ஏற்கனவே கொள்ளை வழக்கில் ஜாமீன் பெற்று, ஓராண்டாகத் தலைமறைவாக இருந்த ராகுல் குர்ஜார், தற்போது ஜெய்ப்பூர் வழக்கிலிருந்து தப்பிக்கப் பழைய வழக்கில் சரணடைந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், முறைப்படி அவரை ராஜஸ்தான் கொண்டு வர போலீஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
