பெரும்பாலும் வங்கிகளில் சாதாரண மக்கள் அவசர தேவைக்காக நகைகளை வைத்து தான் கடன் வாங்குவார்கள். நகை கடன் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. அவசர தேவைக்கு கையில் இருக்கும் தங்க நகைகள் தான் உதவுகிறது. இந்த நிலையில் நகை கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறை தற்போது பொதுமக்கள் மத்தியில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முன்னதாக நகைகளை அடகு வைத்தால் வட்டியை மட்டும் செலுத்தி மீண்டும் மறு அடகு வைத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போதுள்ள புதிய விதிமுறையின் படி அந்த நகைக்கான முழு பணத்தையும் வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டும். இதைத்தொடர்ந்து மறுநாள் தான் மீண்டும் மறு அடகு வைக்க முடியும். இதனால் நகை கடன் வாங்கியவர்கள் முழு பணத்தையும் அந்த நேரத்தில் புரட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

வட்டி மட்டும் கட்டி மறு அடகு வைத்திருப்பது தான் எளிமையான முறையாக இருந்த நிலையில் முழு பணத்தையும் செலுத்த வேண்டும் என்றால் அது மிகவும் கடினம். உதாரணமாக 3 லட்ச ரூபாய்க்கு ஒருவர் நகைக்கடன் வாங்குகிறார் என்றால் அதற்கான வட்டியை மட்டும் செலுத்தி மறு அடகு வைத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போதுள்ள புதிய விதிமுறையின் படி 3 லட்ச ரூபாயும் முழுமையாக செலுத்தி தான் வட்டியை செலுத்த முடியும். அதாவது கடன் வழங்குவதில் உள்ள வெளிப்படை தன்மையையும் பிரச்சனைகளையும் களைவதற்காகவே ரிசர்வ் வங்கி இப்படி ஒரு உத்தரவை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. மேலும் இந்த உத்தரவு சாதாரண  மக்களுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுவதால் இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இதற்கு தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரிசர்வ் வங்கி உடனடியாக அந்த விதிமுறையை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த புதிய உத்தரவு ஏழை மக்களை வாட்டி வதைக்கும் விதமாக இருப்பதால் உடனடியாக இதனை திரும்ப பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.