தூத்துக்குடி மாவட்டம் குலசேகரம் குளச்சவிளாகம் கிராமத்தில் 12 வயது சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் கோடை விடுமுறையை முன்னிட்டு வீட்டில் இருந்தார். இந்த சிறுவன் தன் கையில் சில்வர் காப்பு ஒன்று அணிந்திருந்தார்.

நேற்று அந்த காப்பை மேலும் கீழுமாக இழுத்து சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது முழங்கை பகுதியில் காப்பு சிக்கிக் கொண்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் சிறுவனை திட்டியுள்ளனர்.

சிறிது நேரத்தில் சிறுவனின் கையில் வீக்கம் ஏற்பட்டதை பார்த்த குடும்பத்தினர் சிறுவனின் கையில் எண்ணெயை பூசி காப்பை கழற்ற முயற்சி செய்தனர். இருப்பினும் அந்த காப்பை கழற்ற முடியாததால் நகை கடைக்கு அழைத்து சென்று வெட்டி எடுக்கலாம் என நினைத்து சிறுவனை குலசேகரத்தில் உள்ள ஒரு நகைக்கடைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அங்கும் காப்பை கழற்ற முடியாததால் பைக் ஒர்க்ஷாப்புக்கு  சென்று கழற்ற முயற்சி செய்தனர். ஆனால் அங்கு கழற்ற முடியாமல் இறுதியில் தீயணைப்பு நிலையத்திற்கு சென்ற போது அங்கு காப்பை வெட்டி எடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.