கரூர் மாவட்டத்தில் உள்ள குறவப்பட்டியில் தொழிலதிபரான தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கதிரடிக்கும் எந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வந்தார். இவரது மகன் மோகனசுந்தரம் மனைவி, குழந்தைகளுடன் தாந்தோணி மலை தென்றல் நகரில் வசித்து வருகிறார். தங்கராஜின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அதன் பிறகு தங்கராஜுக்கு அதே பகுதியை சேர்ந்தவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இது காரணமாகவும், சொத்து தொடர்பாகவும் தங்கராஜுக்கும், மோகனசுந்தரத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு தங்கராஜ் கொறவபட்டி- தம்பநாயக்கன்பட்டி பெரிய சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோகனசுந்தரம் தனது மாமா மகா சாமியுடன் இணைந்து லாரி மூலம் மோட்டார் சைக்கிளை மோதி தூக்கி வீசினார். இதில் படுகாயமடைந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கொலைக்கு பயன்படுத்திய டேங்கர் லாரியின் நம்பர் பிளேட் பாகம் மூலம் சோதனை செய்து மோகனசுந்தரத்தை பிடித்து விசாரித்தனர். அப்போது மோகனசுந்தரம் தனது தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனால் மோகனசுந்தரம் மற்றும் மகாசாமியை போலீசார் கைது செய்தனர்.