தமிழகத்தில் தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் மக்கள் ஏராளமானோர் சொந்த ஊருக்கு பயணம் செல்வார்கள். இதனால் பயணிகள் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும் மறுபக்கம் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவது வழக்கம்.

அதன்படி தற்போது வார இறுதியில் மற்றும் பக்ரீத் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல கட்டணம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. கட்டண உயர்வை தடுக்குமாறு அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.