கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ். இவருக்கு 88 வயது ஆகும் நிலையில் மூச்சுக்குழாயில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 14ஆம் தேதி ரோம் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடமானதாக இருப்பதாக தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில் தற்போது அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் நிமோனியா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாலும் வயது மூப்பு போன்ற காரணங்களாலும் போப் பிரான்சிஸ் உடல்நிலை முன்னேற்றம் பெறுவதற்கு சில காலங்கள் ஆகலாம்‌. இதன் காரணமாக போப் பிரான்சிஸ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் இதற்கு தற்போது வாடிகன் நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.

கடந்த 2013ஆம் போப் பெனக்டிக் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். கிட்டத்தட்ட 600 வருடங்களில் முதல் முறையாக இவர் தான் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தவர். இவருக்கு அடுத்தபடியாக தான் அந்த பதவிக்கு போப் பிரான்சிஸ் வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரைப் போன்று இவரும் பதவியை ராஜினாமா செய்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இது தொடர்பாக அவர் எந்த பரிசீலனையும் செய்யவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் அவருடைய உடல் நலத்தில்  தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ‌ வாழ்நாள் முழுவதும் அந்த பதவியில் நீடிக்கவே போப் பிரான்சிஸ் விரும்பியதாக வாடிகன் கூறியுள்ளது.