ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்ட சரண்டா காட்டில் இன்று (செப்.7) பாதுகாப்புப் படையினர் மற்றும் மாவோயிஸ்ட்கள் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. மாநில காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் திடீரென தாக்குதல் நடத்தினர்.

அதற்கு பாதுகாப்புப் படையினர் கடுமையான பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில், 10 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய மாவோயிஸ்ட் தளபதி அமித் ஹன்ஸ்தா சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவரிடமிருந்து பல்வேறு துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் மாவோயிஸ்ட்கள் அதிகமாகச் செயல்படும் மாநிலங்களில் ஜார்க்கண்ட் முக்கிய இடம் வகிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி போஸ்டா காட்டில் நடந்த மோதலில், மற்றொரு நக்சல் தளபதி அருணும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம், அப்பகுதியில் உள்ள மாவோயிஸ்ட்கள் இயக்கத்துக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.