திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை தொடங்கியது மதிமுக. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விருப்ப இடங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. மதிமுகவின் அர்ஜுனராஜ், அந்திரிதாஸ், சேஷன் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். திருச்சி, விருதுநகர், காஞ்சிபுரம் தொகுதிகளில் மதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும் கடலூர், ஈரோடு, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளையும் கேட்க மதிமுக விருப்பம் தெரிவித்துள்ளது.

டி.ஆர். பாலு தலைமையிலான திமுக குழு உடன் மதிமுக பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. திமுக சார்பில் டி.ஆர் பாலு, ஆ.ராசா, பொன்முடி பெரியசாமி, கே. என் நேரு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். திருச்சி தொகுதியை மதிமுகவுக்கு கொடுக்க திமுக திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த முறை ஈரோடு தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை ஒதுக்கிய நிலையில் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. முன்னதாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது மதிமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. திமுகவிடம் மதிமுக 6 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.