பெண் ஒருவர் தொடர்ச்சியாக ஆறு ஊசிகளை விழுங்கியதால் அவரது குடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மருத்துவ உலகத்தையே உரைய வைத்துள்ளது.

மேலும் உணவு அல்லாத, உண்பதற்கு முற்றிலும் தகுதியற்றப் பொருட்களை விழுங்கும் பழக்கத்திற்கு மருத்துவ மொழியில் ‘பைகா டிஸார்டர்’ என்று பெயர். இந்தக் அரிதான மனநல மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், கூர்மையான தையல் ஊசிகளை முழுங்கியுள்ளார்.

மேல்வயிற்றில் ஏற்பட்ட கடுமையான வலி மற்றும் இரத்தப்போக்கு காரணமாகக் குடும்பத்தினர் அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதே இந்தத் திடுக்கிடும் உண்மை எக்ஸ்-ரே பரிசோதனையில் அம்பலமானது.

மருத்துவர்கள் உடனடி அறுவை சிகிச்சை மேற்கொண்டு, குடலைக் கிழித்துக் கொண்டு ஆபத்தான நிலையில் இருந்த அந்த ஊசிகளை மிகவும் கவனமாக வெளியே எடுத்தனர். வழக்கமாகச் சிறு குழந்தைகள் மண், கல், சாக்லேட் பேப்பர் போன்றவற்றை வாயில் வைப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் தீவிரமான ‘பைகா’ குறைபாடு உள்ளவர்கள் இரும்புப் பொருட்கள், கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் கூர்மையான ஊசிகளைக் கூட உண்ணும் விசித்திரமானப் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள்.

உடலில் இரும்புச்சத்து மற்றும் துத்தநாகக் குறைபாடு கடுமையாக இருக்கும் போதும், மனரீதியான கடுமையான உளைச்சலுக்கு ஆளாகும் போதும் மனித மூளை இதுபோன்ற விபரீதமானப் பொருட்களை உண்ணத் தூண்டுகிறது என்று மனநல மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.

உயிருக்கே ஆபத்தான இந்த விசித்திர நோயைப் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே உள்ளது. தங்கள் வீட்டில் உள்ளவர்கள் யாரேனும் உணவு அல்லாத விசித்திரப் பொருட்களைச் சாப்பிட முற்பட்டால், அதை வெறும் பழக்கம் என்று அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ மற்றும் மனநல ஆலோசனைகளைப் பெற வேண்டியது அவசியமாகும்.

ஆரம்பக் கட்டத்திலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், குடல் கிழிதல் மற்றும் உட்காயங்கள் ஏற்பட்டுப் பரிதாபமாக உயிர் பிரியும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த மருத்துவச் செய்தி, பலரையும் ஆச்சரியத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.