பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவிக்குத் திடீரென மாதவிடாய் ஏற்பட்ட நிலையில், கழிவறை செல்ல அனுமதி மறுத்த ஆசிரியர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற இந்தச் சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் அரங்கேறியுள்ளது.
கடந்த மார்ச் 13-ஆம் தேதி நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, ஒரு மாணவிக்குத் தேர்வின் கடைசி ஒரு மணி நேரத்தில் திடீரென மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளான அந்த மாணவி, சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவதற்காகக் கழிவறை செல்ல அனுமதிக்குமாறு அங்கிருந்த தேர்வு கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாணவியின் இக்கட்டான நிலையைப் புரிந்துகொள்ளாத தேர்வு கண்காணிப்பாளர், “தேர்வு நடைபெறும் நேரத்தில் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்க முடியாது” என்று கூறி அந்த மாணவிக்கு அனுமதி மறுத்துள்ளார். இதனால் அந்த மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கும், உடல் ரீதியான அசௌகரியத்திற்கும் இடையே மீதமுள்ள நேரத்தைத் தேர்வு அறையிலேயே கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மாதவிடாய் மேலாண்மை என்பது பெண்களின் அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், ஒரு இயற்கையான உயிரியல் நிகழ்விற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது கல்வித் துறையின் உணர்வற்ற தன்மையைக் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சிறுநீர் கழிக்க அனுமதிக்கும் ஆசிரியர்கள், மாதவிடாய் போன்ற அவசரத் தேவைக்கு அனுமதி மறுப்பது ஏன் என்று மாணவியின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தனிப்பட்ட ஒரு ஆசிரியரின் தவறு என்பதை விட, ஒட்டுமொத்த தேர்வு முறையிலும் நிலவும் உணர்வற்ற நிலையையே காட்டுகிறது என்றும், வருங்காலத்தில் தேர்வு முறையை மாணவர் நலன் சார்ந்ததாக மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து மாவட்டக் கல்வி அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்றாலும், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
