
அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்திற்கு இரண்டு அதிகாரங்கள் மட்டும்தான் உள்ளது. கட்சிக்குள் பிளவு ஏற்பட்டால் ஆவணங்கள் அடிப்படையில் விசாரிக்கவும், கட்சியை பதிவு செய்யும் அதிகாரம் மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.
ஆனால் உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. தேர்தல் ஆணையம் குமாஸ்தா வேலை மட்டுமே பார்க்க வேண்டும். அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை தேர்தல் ஆணையம் முறைகேடாக பயன்படுத்துகின்றது. கட்சியில் இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளனர் என்று அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நடந்த விசாரணைக்கு சிவி சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.