பஞ்சாப் மாநிலத்தின் பிரோஸ்பூர் எல்லைப் பகுதியில் பணியில் இருந்தபோது தவறுதலாக பாகிஸ்தான் எல்லையை கடந்த பிஎஸ்எப் வீரர் பூர்ணம் குமார் ஷா, 21 நாட்கள் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு, கடந்த புதன்கிழமை அட்டாரி-வாகா எல்லை வாயிலாக இந்தியாவுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.

மேற்கு வங்காள மாநிலம் ரிஷ்ராவைச் சேர்ந்த பூர்ணம் குமார் ஷா, கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட பதற்றத்தில் தவறுதலாக எல்லை தாண்டி சென்றுள்ளார். பாகிஸ்தான் போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.

அவரது மனைவி ராஜனி குமார் ஷாவிடம் செல்போனில் பேசியுள்ளார். பின்னர் ராஜனி கூறுகையில், பூர்ணம் ஷா பாகிஸ்தான் சிறையில் இருந்தபோது அவரிடம் ஒவ்வொரு இரவும் விசாரணை நடத்தப்பட்டது. தூங்க முடியாத அளவிற்கு வாட்டப்பட்டதாகவும், எல்லைப் பாதுகாப்பு மற்றும் அதிகாரிகள் பற்றிய விபரங்களை கேட்டு வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார்.

அவரை உடல் ரீதியாக வன்முறை செய்யவில்லை என்றாலும், தூக்கம், சுகாதாரம், அடிப்படை வசதிகள் இல்லாமல், உளவாளி போலவே நடத்தியதாக பூர்ணம் குமார் ஷா கூறியதாக ராஜினி தெரிவித்துள்ளார்.

பூர்ணம் ஷா பாகிஸ்தானில் மூன்று இடங்களில் மாற்றி மாற்றி வைக்கப்பட்டதாகவும், ஒரு இடம் விமான தளத்திற்கு அருகே இருந்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். பறக்கும் விமானங்களின் சத்தம் தொடர்ந்து கேட்டதாலே அந்த சந்தேகம் வந்ததாக கூறியுள்ளார்.

பல் துலக்க அனுமதிக்கப்படாத நிலையில் அவருக்கு உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டன. தற்போது இந்தியாவுக்குத் திரும்பிய பின் மருத்துவ பரிசோதனை, உளவுத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

17 ஆண்டுகளாக பூர்ணம் குமார் ஷா நாட்டுக்காக  சேவையாற்றுகிறார். நாட்டிற்காக போராடியதில் எங்களுக்கு பெருமையாக  உள்ளது. விரைவில் என் கணவரை பார்க்க விரும்புகிறேன் என ராஜனி கூறியுள்ளார்.