ஆதித்ய தார் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர்’ படத்தின் முதல் பாகம் மெகா ஹிட் அடித்த நிலையில், அதன் இரண்டாம் பாகமான ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் இறுதியில் இந்திய உளவுத்துறை அதிகாரியான ஹம்சா அலி மசாரி, பாகிஸ்தானின் லியாரி பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது போன்ற ஒரு விறுவிறுப்பான காட்சியுடன் கதை முடிந்திருந்தது.

தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் பாகத்தின் டிரெய்லர், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் தேசப்பற்று மிக்க வசனங்களுடன் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ரன்வீர் சிங்குடன் இணைந்து சஞ்சய் தத், ஆர். மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகம் பாக்ஸ் ஆபீஸில் சுமார் 1300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்ததால், இரண்டாம் பாகத்தின் மீதான வர்த்தக ரீதியான எதிர்பார்ப்பும் விண்ணைத் தொட்டுள்ளது.

இந்நிலையில் ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் பான்-இந்தியா திரைப்படமாக வெளியாகிறது. டிரெய்லரில் காட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் மாதவன்-ரன்வீர் காம்போ படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.