
இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. அதாவது லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி கடந்த 2020 ஆம் ஆண்டு நுழைய முயன்ற நிலையில் அதனை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. அதிலிருந்தே அடிக்கடி இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் எல்லையில் இருநாடும் ராணுவ வீரர்களை நிறுத்தியது. கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் மறக்க முடியாத ஒன்று. இதில் சீன ராணுவம் தோற்கடிக்கப்பட்டாலும் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த பிரச்சனையை தீர்க்க கடந்த 4 வருடங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் தான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் எல்லையில் ராணுவ வீரர்களை திரும்பப் பெற சம்மதித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது முற்றிலும் இரு நாடும் தங்கள் இராணுவ வீரர்களை திரும்ப பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் சீனா படைகள் எல்லையில் இனிப்புகளை பரிமாறிக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எல்லையில் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் எல்லையில் இருநாட்டு படைகளும் முற்றிலும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.